Feeds:
Posts
Comments

Posts Tagged ‘ron paul’

 நம்மில் பெரும்பாலானோருக்கு அமெரிக்கத் தேர்தல் பற்றித் தெரிந்தது; முதன்முறையாக ஒரு பெண்ணும், ஒரு கருப்பினத்தவரும் போட்டியிடுகிறார்கள், இவர்களில் யார் வென்றாலும் அதுவொரு “அமெரிக்கச் சரித்திரம்”, “பெரிய மாற்றம்” என்று. முதல் பெண் ஜனாதிபதி, முதல் கருப்பின ஜனாதிபதி என்றவொரு மாற்றத்தைத் தவிர வேறு மாற்றம் என்ன என்று எனக்கு இன்னும் பிடிபடவில்லை. இந்த அதீத விளம்பர மாற்றங்களுக்குப் பின்னால் ஒரு உண்மையான, புரட்சிகரமான மாற்றம் கேட்பாரற்றுக் கிடக்கிறது.  அந்த புரட்சி பற்றி ஒரு அறிமுகம்.

போன வருடத்தின் மே மாதத்தில் ஒரு நாள், ஏதெச்சையாக தொலைக்காட்சியில் சேனலை மாற்றிக்கொண்டிருந்த போது, குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் வாதத்தின் ஒளிபரப்பை பார்க்க நேரிட்டது. மிட் ராம்னியின் “குவாண்டானமோவில் உள்ள நமது ராணுவத்தளத்தை இரட்டிப்பாகுவேன்” என்ற எகத்தாளத்திற்கும், குலியானியின் 37-வது ”9/11” என்ற இறைச்சலுக்கும் நடுவே ஒரு, அமைதியான, C-Span போன்ற தூக்கம் வரவழைக்கும் சேனலில் ஒலிக்கும் குரலில் ”Constitution” பற்றியும், அமெரிக்காதான் பின் லேடனுக்கும், சதாம் ஹுசைனுக்கும் ஆயுதம் அளித்தது என்றும், அமெரிக்காதான் முதல் பெர்சியன் கல்ப் போரிலிருந்து ஈராக் மீது குண்டு மழை பொழிந்தது என்றும், ஐம்பதில் C.I.A தான் ஈரானில் ராணுவ ஆட்சியையும் கொண்டுவந்ததை ஞாபகப்படுத்தியும், constitution-ஐ ஒழுங்காகப் பின்பற்றியிருந்தால் இந்த மாதிரி ”சேட்டை”களில் எல்லாம் அமெரிக்கா ஈடுபடுத்திக்கொண்டிருக்காது என்றெல்லாம் ஒரு வயதானவர் பேசிக்கொண்டிருந்தார். மேலும்  9/11 போது நடந்த தாக்குதலுக்குக் காலங்காலமாக அமெரிக்கா கடைபிடித்து வரும் வெளியுரவுக் கொள்கைதான் காரணம் என்பதை உறுதிப்படுத்தி, அவர்கள் தாக்குவது நாம் மகிழ்ச்சியாகவும் ஆடம்பரமாக வாழ்வதைக்கண்டு என்று சொல்லிக்கொண்டு  ரொம்ப நாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது என்றும், கடந்த ஐந்தாறு வருடங்களில் அமெரிக்க தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ, பத்திரிக்கைகளிலோ கேட்காத, படிக்காத உண்மையை, ஒரு ‘அரசியல்வாதி’, அதுவும் குடியரசு சார்பாக (இப்போதய புஷ் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்) ஜனாதிபதி போட்டியில் இருப்பவர் சொல்லக் கேட்டதில்.. .உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். ஆர்வம் மேலிட, யார் இந்த பெரியவர் என்று பார்த்தபோது எனக்கு டாக்டர். ரான் பால் அறிமுகமானார்.  

Ron paul 1

     அன்று முதல் வேலை நேரம் தவிர, மற்ற  நேரங்களில் எல்லாம் டாக்டர். ரான் பால் பற்றியத் தேடல்கள்.. (google, youtube, ronpaul forums )  எனக்கு ஒரு முக்கியமான செயலானது. அவரைப் பற்றித் தெரியத் தெரிய என் தேடல்  அதிகமானதுடன், நிறைய உண்மைகளும் (IRS constitution-க்கு எதிரானது, Federal Reserve தோன்றிய காரணம், உலகெங்கும் அமெரிக்கா நடத்திய அரசியல் சித்து விளையாட்டுக்கள்), எவ்வாறு அமெரிக்காவில் வாழும் மக்கள் பணமுதலைகளுக்கும், பெரிய நிறுவனக்களுக்கும், ஊடகங்களுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள் (என்னையும் சேர்த்து) என்பதும் புலனானது.

     நான் அமெரிக்க குடியுரிமைப் பெற்றவனில்லை, ஓட்டுப் போட வாய்ப்பும் இல்லை. இருந்தும் என்னால் முடிந்தவரை டாக்டர். ரான் பால் பற்றி எல்லொரிடமும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கூறி வருகிறேன். ஏன்..?

யார் இந்த டாக்டர். ரான் பால்?

     பென்சில்வேனியா மாகணத்தில் பிறந்து, டெக்சாஸ் மாகாணத்தில் மருத்துவராக பணியாற்றி, சுமார் 4000 குழந்தைகளுக்கு மேலாக பிரசவம் பார்த்து, கடந்த பத்து முறை ஒரு மாவட்டத்தின் பிரதிநிதியாக காங்கிரஸில் பணியாற்றி வருகிறார். நாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக(?) ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு, ஐந்து குழந்தைகள், பதினைந்து பேரக்குழந்தைகள், ஒரு கொள்ளு பேரனும் பெற்று சீறும் சிறப்புமாக இருக்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை…!!!  அவரது வாழ்க்கையே நமெக்கெல்லாம் ஒரு பாடம்..  நாம் ஒவ்வொருவரும் வாழ ஆசைப்படும், ஆதங்கப்படும் ஒரு வாழ்க்கை.

Pauls

இத்தனை வருடங்கள் அவர் காங்கிரஸில் பணியாற்றிய போது அவர் அளித்த ஒரு ஓட்டுக்கூட,  constitution எனப்படும் அமெரிக்க அரசாணைக்கு எதிராக இருந்ததில்லை என்பதை அறியும் போது வரும் ஆச்சர்யம் அளவில்லாதது. நிறைய முறை அவரது ஒரு ஓட்டே தனித்து  நின்றதால் அவரை “Dr. No” என்றும் அழைக்கிறார்கள்.

முழுவதாக அவரைப்பற்றித் தெரிந்து கொள்ளும் வரை அவர் ஒரு முரண்பட்ட மனிதராகவே தோன்றுவார். நமெக்கெல்லாம் தெரிந்தவரை (புஷ் போன்றோரின் தயவால்) குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் போர் வெறி ப்டித்தவர்களாகவும், கட்டுப்பாடுகள் அதிகம் விதிப்பவர்களாகவும் மட்டுமே தோன்றும். அவ்வளவு ஏன், குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களே “இவர் குடியரசு கட்சிக்கு லாயக்கற்றவர்” என்று கூறிக் கூறி மாய்ந்து விட்டார்கள். இவர்களுக்கு, டாக்டர். ரான் பால் உடனடியாக ஞாபகப்படுத்துவது,  குடியரசு கட்சியின் உண்மையான கொள்கையே, போர்களுக்கு எதிராகவும், சிறிய அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், பொருளாதார வலிமைக்கும் உடன்பட்டே இருந்து வந்துள்ளது என்பதைதான். மேலும் புஷ் 2000 -வது ஆண்டு போட்டியிட்டதே இதே கொள்கைகளை முன்னிருத்திதான் என்றும் ஞாபகப்படுத்தத் தவற மாட்டார்.

அமெரிக்க பொருளாதாரம் அதல பதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதையும், டாலர் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருப்பதின் பாதிப்புகளையும், முக்கியமாக ஏன் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான காரணங்களையும் இவரைத் தவிர எந்த அரசியல்வாதியும் சொல்லிக் கேட்டதில்லை. இதை எவராலும் மறுக்க இயலாது.

ரான் பால் புரட்சி!

     இவர் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள்… உண்மையான, புரட்சிகரமான மாற்றங்கள். ஈராக் மட்டுமில்லாது உலகம் முழுவதும் உள்ள 700-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ தலவாடங்களை காலி செய்வது, C.I.A, Federal Reserve, I.R.S  போன்ற ”constitution” -க்கு எதிரான துறைகளை ஒழிப்பது, NAFTA, NAU, UN போன்ற அமெரிக்காவிற்கு பயனளிக்காத அமைப்புகளிருந்து விடுவித்துக்கொள்வது போன்ற மாற்றங்கள். இப்போது பெரும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் கருப்பினத்தவரான ஒபாமாவின் தாரக மந்திரமே “மாற்றம்” (CHANGE) என்பதுதான். ஆனால் ரான் பால் கொண்டு வர நினைக்கும் மாற்றங்களுக்கு முன்னால், ஒபாமா-வினுடயது வெறும் வாய் வார்த்தைகளாகவே தோன்றுகிறது.

டாக்டர். ரான் பாலுக்கு இருக்கும் தொண்டர்ப்படை இதுவரை அமெரிக்க வரலாறு காணாதது. அவர் உரையாற்றும் இடங்களுக்கு கூடும் மக்கள் கூட்டம் சக போட்டியாளர்கள் வெளிப்படையாகவே பொறாமைப்படுமளவு உள்ளது. ஒவ்வொரு வாக்குவாதத்தின் இறுதியிலும் நடத்தப்பட்டும் வலைத் தேர்தலிலும் தொலைப்பேசித் தேர்தலிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு நாள் வசூலித்த தேர்தல்   நிதியான 6.2 மில்லியன் டாலர்கள் ஒரு தனி வரலாறு. இந்தப் பணம் முழுவதும் தனி மனிதர்களால் சிறிது சிறிதாக சேர்த்தது என்பது கூடுதல் செய்தி.

ron paul donations

ரான் பால் = காந்தி..?

டாக்டர் ரான் பால் அவர்களை  நமது தேசப்பிதா காந்தியுடன் பல வகைகளில் ஒப்பிடலாம். முக்கியமாக இந்த காந்தியின் கூற்று மிகவும் பொருந்தும்.
முதலில் உன்னை உதாசினப்படுத்துவர்,

அதன் பின் ஏளனம் செய்வர்,

அதன் பின் சண்டையிடுவர்,

அதன் பின்  நீ வெல்வாய்

அனைத்துத் தொலைத்தொடர்பு தேர்தல் சார்ந்த செய்திகளிலும், நாளேடுகளிலும் முடிந்தவரை அவரை இருட்டடிப்பு செய்வதும், இவரது கொள்கைகளையும், இவரையும் ஏளனம் செய்வதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இவை அனைத்தும் பெரிய நிறுவனங்களால் நடத்தப்படுவது. இவரது வெற்றி இந்த நிறுவனங்களுக்கெல்லாம் பேரிடியாக இருக்கும். வலைத்தளங்கள் மட்டுமே இதுவரை எந்த தடைகளும் இல்லாது இருப்பதால், இங்கு மட்டும் இவரது சாம்ராஜ்யம் கோ்லோச்சிக்கொண்டிருக்கிறது. இவருடன் வாதங்களில் சரிக்குச் சரியாக போட்டியிட்டு வெற்றி பெற இயலாது என்பதை நன்றாக அறிந்த போட்டியளர்கள், வாதங்களின் போது நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதும்,   நையாண்டி செய்வதுமாக இருந்து காணாமல் போயிருக்கிறார்கள். இதில் முக்கியமாக ரூடி குலியானியைச் சொல்லலாம். வேறெதும் கிடைக்காமல், எப்போதோ இவரது பெயரில் வெளிவந்த செய்தி கடிதங்களைத் திரித்து இவருக்கு “இன வெறியன்” என்ற  நிறமும் தீட்ட முயன்று தோற்றனர்.

     FOX News தன்னை அவர்களது வாதத்திற்குச் சேர்க்காத போதும், CNN, MSNBC வாததிற்குச் சேர்த்து  விதாண்டவாத கேள்விகள் கேட்ட போதும், கேள்வி கேட்டு பதிலலிக்க நேரம் கொடுக்காத போதும் அவர் காட்டிய பொறுமை காந்தியைக் கண்முன் நிறுத்தினார். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் இதே ஏளனங்களுக்கும், உதாசினத்திற்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறார், அதுவும் ஒவ்வொரு, ஜனாதிபதியும் சத்தியம் செய்யும் Constitution படி தவறாமல் நடந்து கொண்டிருப்பதற்காக, என்பதை உணரும் போது அவரது பண்பட்ட அனுபவம் நமக்குப் புரியும்.

எல்லாம் சரி.. ஓட்டு்கள் ஏனில்லை?

ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நாம் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ அதே குணங்களைக் கொண்டு  ஒருவர் போட்டியிட்டும் ஏன் அமெரிக்க மக்கள் கண்டுகொள்ளவில்லை? ஏன் ஓட்டுப் போட வில்லை? இந்த கேள்விக்கு விடை தேடும் போதும், பல அமெரிக்கர்களிடம் பேசிய போதும் இன்னும் சில உண்மைகள் தெரிய வந்தது…

…. அடுத்த பகுதியில்…

Advertisements

Read Full Post »